இந்தியக் குடும்பங்களின் உறவுகளில் உயிர்நாடியாக வாழ்ந்துவரும் பெண்கள், நிகழ்காலத்தில் பல்வேறு துறைகளில் அடுத்தடுத்து நிகழ்த்திவரும் சாதனைகள் அனைவரையும் பெருமை கொள்ளச் செய்கிறது என்றால் அது மிகையாகாது.
வலுவான உடல்கட்டு, நுண்ணறிவு, செயல்திறன், வீரம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் விமானப் படையிலும் கால் பதித்து, பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். படை வீரர்களாக, விமானிகளாக களம் காணும் பெண்கள், வான் வெளியில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டும் சாரங்-அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர் சாகசக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள துருவ்-அதிநவீன
இலகுரக ஹெலிகாப்டரில் வானத்தில் பறந்தபடி சாகசங்களை நிகழ்த்திக் காட்டும் குழுவுக்கு "சாரங்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சாரங் சாகசக் குழுவில் முதல்முறையாக பெண்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். துருவ் ஹெலிகாப்டரின் துணையோடு வானத்தில் சாகசம் நிகழ்த்தும் சாரங் குழுவை இந்திய விமானப் படை 2003-இல் அமைத்தது.
அண்மைக் காலமாக ஒற்றை என்ஜின் கொண்ட சீத்தா (சிறுத்தை) சிறிய ரக ஹெலிகாப்டரில் வானத்தில் பறக்க மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 2010-இல் இந்த விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்தால், சீத்தா ஹெலிகாப்டரில் விமானியாகப் பணியாற்றிவந்த தீபிகா மிஸ்ரா, 2014-இல் சாரங் சாகசக் குழுவில் சேர்க்கப்பட்டார்.
தீபிகாவின் நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையில் இரண்டு என்ஜின்கள் கொண்ட விமானம் அல்லது ஹெலிகாப்டரில் சாகசம் செய்ய அனுமதிக்கப்பட்டது, இந்திய விமானப் படை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம் இரட்டை என்ஜின் ஹெலிகாப்டரில் பறந்து சாகசம் புரியும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை தீபிகா பெற்றுள்ளார். இதயம் நிறைந்த கனவுகளோடு சாரங் குழுவில் இடம்பிடித்த தீபிகா, அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற 10-ஆவது இந்திய விமானத் தொழில் கண்காட்சியில் சாரங் குழுவுடன் கலந்து கொண்டார்.
வானத்தில் சுழன்றபடி இந்திய ஹெலிகாப்டரின் திறன்களை தனது சாகசங்கள் மூலம் வெளிப்படுத்தும் நாள்களுக்காகக் காத்திருக்கிறார். இந்தக் குழுவில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிவரும் விமானி தீபிகா, அடுத்த விமானத் தொழில் கண்காட்சியில் தனது குழுவினரோடு சேர்ந்து சாகசம் நிகழ்த்தவிருக்கிறார்.
சாரங் குழுவில் இடம்பெற்ற தனது அனுபவங்களைச் சொல்கிறார் தீபிகா:
""இரட்டை என்ஜின் கொண்ட ஹெலிகாப்டரில் பறந்து சாகசம் புரிந்தது மகிழ்ச்சிகரமான தருணமாகும். இந்திய விமானப் படை வரலாற்றில் இது புதிய தொடக்கமாகும். சாரங் குழுவில் பெண்களுக்கு இடமளித்த இந்திய விமானப் படைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாரங் சாகசக் குழுவில் தற்போது
ஃபிளைட் லெப்டினென்ட் சந்தீப் சிங்கும் சேர்ந்திருக்கிறார். இந்தக் குழுவில் எனது கணவர் செüரப் கக்கார் ஏற்கெனவே இடம் பெற்றிருந்தார். இவை எனக்கு கூடுதல் பலம்.
2006-ஆம் ஆண்டு விமானப் படை அகாதெமியில் விமானிப் பயிற்சியை முடித்துக் கொண்டு, விமானப் படையில் இணைந்தபோது, சூரியகிரண் அல்லது சாரங் போன்ற விமான சாகசக் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற கனவு மனதில் துளிர்விட்டது. என்றாவது ஒருநாள் எனது கனவு நனவாகும் என்ற நம்பிக்கை, ஆண்டுகள் பல கடந்த பிறகும் பட்டுப் போகாமல் நிலைத்திருந்தது.
இதற்காக கடினமாக உழைத்தேன். சாகசக் குழுவில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற வேட்கையோடு திறமையை மேம்படுத்திக் கொண்டே வந்தேன். அதற்கேற்ப 2010-இல் விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களால் சாரங் போன்ற சாசகக் குழுவில் இடம்பிடிக்க என்னைப் போன்ற பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. சேதக் மற்றும் சீத்தா ஹெலிகாப்டர்களில் 1600 மணி நேரம் வானத்தில் பறந்த அனுபவங்கள் அளித்த துணிவோடு சாரங் சாகசக் குழுவில் சேருமாறு விமானப் படை அழைப்பு விடுத்தபோது அதை மகிழ்வோடு ஏற்று, இந்தக் குழுவில் இணைந்தேன்.
2014, ஜூலையில் தான் இந்தக் குழுவில் இடம் பெற்றேன். 14 விமானப் படை அதிகாரிகள், 32 விமானப் படை வீரர்கள் கொண்ட சாரங் குழுவில் தற்போது நானும் சந்தீப் சிங்கும்தான் பெண்கள். உலக அளவில் ஹெலிகாப்டர் சாகசங்களை நிகழ்த்தும் குழுவில் பிரிட்டிஷ் ராயல் ராணுவப் படையின் புளூ ஈக்கில்ஸ் ஹெலிகாப்டர் சாகசக் குழுவுக்கு அடுத்தபடியாக பெண்கள் இடம்பெற்றிருப்பது நமது சாரங் குழுவில்தான்.
ஹெலிகாப்டரில் சாகசங்கள் நிகழ்த்துவதில் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். புதிய நுட்பங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்து வருகிறேன். தற்போது குழுவின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறேன். இன்னும் கற்க வேண்டிய விஷயங்கள் நிகழ்த்த வேண்டிய சாதனைகள் ஏராளம் உள்ளன.
அடுத்த விமானத் தொழில் கண்காட்சியில் எனது குழுவோடு இணைந்து சாகசம் புரிந்து சாதனை படைப்பேன். சாரங் குழுவில் அனைவரும் பெண்களாக இருக்கும் காலம் வரும் என்று காத்திருக்கிறோம்.
சாதனைகளின் உச்சங்களை நோக்கி பெண்கள் நகர வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு 4 வயதில் ஆல்யா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை வளர்ப்பிலும் ஆர்வமாகச் செயல்பட்டு வருகிறேன். குடும்பத்தையும், தேசத்தையும் ஒருசேர நேசிக்கிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.